

சென்னை,
மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா? குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதவி உயர்வு பெற்றது எப்படி? நடவடிக்கைக்கு தயக்கம் காட்டுவது ஏன்? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவார் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக எட்டு வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை குறித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டிய நிர்வாக அமைப்புகளின் செயல்பாடே தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சில அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதாகவும், சிலர் பணி ஓய்வு பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது.
மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தாமதமானது ஏன்?
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும் சூழலில், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வும் பணி ஓய்வும் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?
மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?
2017 முதல் 2023 வரை இந்நிதி நிர்வாகத்தில் தொடர்புடைய அனைவரின் பங்கும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதா?
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி, முறைகேட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது நிர்வாகப் பின்னணியைப் பாராமல் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் இதில் தொடர்புடைவர்கள் என விசாரணையில் நிரூபிக்கப்பட்டாலும், தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்புடைவர்கள் எனத் தெரியவந்தாலும் பாரபட்சமின்றி ஒரே சட்ட நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், முறைகேட்டால் இழப்பு ஏற்பட்ட அரசுப் பணத்தை முழுமையாக மீட்டெடுத்து, அது மாணவர்களின் நலனுக்கே பயன்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்களின் உரிமைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெறுவது என்பது சாதாரண நிர்வாகத் தவறாகக் கடந்து செல்லக்கூடியதல்ல. கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கல்வி பயிலும் மாணவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய விளக்கம் அளிப்பதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.