‘பகுத்தறிவை வளர்க்க வேண்டிய இடத்தில் முறைகேடுகள்; கல்வியில் விஷம் கலக்கும் செயல்’ - ஜோதிமணி எம்.பி.

புத்தகக் கொள்முதல் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
‘பகுத்தறிவை வளர்க்க வேண்டிய இடத்தில் முறைகேடுகள்; கல்வியில் விஷம் கலக்கும் செயல்’ - ஜோதிமணி எம்.பி.
Published on: 

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிக்கொண்டு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்த செய்தியைப் படித்தேன். போலி பதிப்பகங்கள் மூலம் அச்சிடப்பட்ட போலியான நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் வாங்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

அறிவுக்கு எதிரான அநீதி

பெரியார் பெயரையும், அறிவுலகத்தின் நோக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஊழல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம். மாணவர்களின் அறிவை வளர்க்க வேண்டிய இடத்தில், தரமற்ற மற்றும் தவறான நூல்களைத் திணிப்பது அறிவுக்கு எதிரான அநீதியாகும்.

துரோகம்

புத்தகங்கள் ஒரு சமூகத்தின் அறிவையும், சிந்தனையையும், எதிர்காலத்தையும் செதுக்குபவை. அத்தகைய புத்தகங்களை கொள்முதல் செய்வதில்கூட ஊழல் செய்வது, வெறும் நிதி முறைகேடு மட்டுமல்ல; அது அறிவின் மீது நடத்தப்படும் தாக்குதல். எதிர்கால தலைமுறைக்கு இழைக்கப்படும் துரோகம். ஒரு தலைமுறையின் அறிவுரிமையையே அவமதிக்கும் மாபெரும் குற்றம்.

விஷம் கலக்கும் செயல்

அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய இடத்தில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறுவது கல்வியில் விஷம் கலக்கும் செயலாகும். புத்தகக் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தவர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

புத்தகக் கொள்முதல் கொள்கை

போலி பதிப்பகங்கள் மூலம் அச்சிடப்பட்டு வாங்கி வைக்கப்பட்டுள்ள நூல்களை உடனடியாக பெரியார் அறிவுலகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். பொது நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை உறுதிசெய்யும் புத்தகக் கொள்முதல் கொள்கையை அரசு உருவாக்கி வெளியிட வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X