

சென்னை,
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தவிர பிற பணிகளுக்கு இனி நிரந்தர அடிப்படையில் எவரையும் நியமிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உண்மையானதாக இருந்தால் சமூகநீதிக்கும், கண்ணியமான மனிதவாழ்க்கைக்கும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மக்கள் நலவாழ்வுத் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் , நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு செலவுகளைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இனி நிரந்தரமாக நியமிக்கப்படக் கூடாது என்றும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசுத்துறைகளில் டி பிரிவு பணிகளில் மட்டும் ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சி பிரிவு பணியிடங்களுக்கும் இந்த முறையை நீட்டிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு அமைத்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்குழுவின் ஆய்வு வரம்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், அவ்வாறு செய்யப்படாததால், பரூக்கி தலைமையிலான குழு பணியை தொடங்காத நிலையில், எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதையும் கடந்து இது போன்ற கொள்கை முடிவுகள் அமைச்சரவையில் தான் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இந்த முடிவை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்கிறார்கள் என்றால் முதல்-அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொம்மைகள் தானா. சுகாதாரத்துறையில் ஏற்கனவே மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணி நிலைப்பு செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையே மாற்றப்பட வேண்டும்; அனைத்துப் பணியாளர்களும் நேரடியாக நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது. இது சமூகநீதியை படுகொலை செய்யும் செயலாகும். இது தான் திமுக அரசு சமூகநீதியை காக்கும் லட்சணமா? இதைத் தான் திமுக விரும்புகிறதா? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும், மக்கள் நலவாழ்வுத்துறை உள்பட அனைத்துத் துறைகளில் ஒப்பந்த முறை நியமனங்கள் ரத்து செய்யப்படும்; நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்படுவார் என்றும் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.