பொதுச்சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மக்கள் நல அரசா? - வேல்முருகன்

அரசின் நேரடி கண்காணிப்பிலேயே விமான நிலைய உள்கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வேல்முருகன்
Published on

சென்னை,

பொதுச்சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மக்கள் நல அரசா? முதல்-அமைச்சர் விஜய்க்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தை மாற்ற கோரி கடிதம்

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை விமான நிலையத்தை தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) என்ற ஒன்றிய அரசின் பொதுத்துறை அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், AAI-க்குப் பதிலாக மாற்று ஆபரேட்டரை நியமிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான அடித்தளமாக அமையுமோ என்ற தீவிர ஐயத்தை ஏற்படுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், நிர்வாகத்தை மாற்ற முனையும் இந்த அணுகுமுறையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

யாருடைய நலனுக்காக?

பயணிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சரக்கு கையாளும் திறன் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கான தீர்வு அரசு நிர்வாகத்தை மாற்றுவதுதானா? AAI நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பின், அவற்றைச் சுட்டிக்காட்டி தேவையான நிதி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மனிதவள கட்டமைப்புகளை பெற்றுத் தந்து திறம்பட செயல்பட வைப்பதே மக்கள் நல அரசின் பொறுப்பாகும்.

சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி, ஐந்தாவது முனையம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளைக் கையாளும் இலக்கை நோக்கி நகரும் வேளையில், நிர்வாகத்தை மாற்றத் துடிப்பது யாருடைய நலனுக்காக?

த.வா.க. சார்பில் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு, AAI நிர்வாகத்தில் உள்ள இடர்பாடுகளை வெளிப்படையாக ஆராய்ந்து, அவற்றை மத்திய அரசுடன் இணைந்து களைய முன்வர வேண்டும். விமான நிலைய நிர்வாகம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான அனைத்து முடிவுகள், ஒப்பந்த விதிகள் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை மக்களிடம் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

சென்னை விமான நிலையம் என்பது போக்குவரத்து தளம் மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதன்மை நுழைவாயில். அதன் எதிர்காலம் சார்ந்த முடிவுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை முன்னிறுத்தாமல், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் பொதுச் சொத்து பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைய வேண்டும். எனவே, தனியார்மய எண்ணத்தை முதல்-அமைச்சர் விஜய் முற்றிலுமாகக் கைவிட்டு, அரசின் நேரடி கண்காணிப்பிலேயே விமான நிலைய உள்கட்டமைப்பை தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com