திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா? - அப்பாவு கேள்வி

ஆர்.எஸ்.பாரதி புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய என்ன தயக்கம்? என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா? - அப்பாவு கேள்வி
Published on

சென்னை,

தமிழக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் முடிவுகள் மே மாதம் 4-ந் தேதி முடிவடைந்த இரவே தி.மு.க. கூட் டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பனையூருக்கு அழைத்து வந்து த.வெ.க. கூட்டணியில் சேர்த்தவர் இன்றைய முதல்-அமைச்சர். தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 25 பேரை கட்சியை தகர்த்து தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தவர்.

இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முதல்-அமைச்சரை சந்தித்த பின், பத்திரிகையாளர் சந்திப்பின்போது "உங்களது 2 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள் இடைத்தேர்தலில் நானே பிரசாரம் செய்து வெற்றி பெறச்செய்வேன்" என்று வாக்குமூலம் தந்தார்.

அதனடிப்படையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை த.வெ.க.விற்கு ஆதரவாக ராஜினாமா செய்ய சொன்ன முதல்-அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னருக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு கொடுத்துள்ளார்.

இத்தனை குற்றங்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்த தமிழக போலீஸ்துறை, ஊத்தங்கரை இளையராஜா எம்.எல்.ஏ.விடம் போலியான புகார் மனு பெற்று தி.மு.க.வின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா?.

இதுபோல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆர்.எஸ்.பாரதி புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய என்ன தயக்கம்? தற்போது தமிழகத்தில் செயல்படுவது தமிழக காவல் துறையா? அல்லது த.வெ.க. காவல் துறையா? என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com