

சென்னை
ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்தில் அவரை லண்டன் அழைத்து செல்கிறீர்களா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித்தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் தலைமையிலான குழு இன்று முதல் 6 நாட்களுக்கு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முதலீ்டுகளை ஈர்த்து விட்டு, 17-ந்தேதி அன்று சென்னை திரும்பும். இக்குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெறுகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், #தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் "#கல்லாப்பெட்டிகூட்டணி" என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து "மதச்சார்பற்ற சமூகநீதி #வெற்றிக்கூட்டணி" என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் CM sir ?
நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற #கூட்டணிகட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லி கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் "#நரித்தனத்தின் வெளிப்பாடு" என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் CM sir ?
இந்தியாவில் அரசியல் அமைப்புச்சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை #இந்திரா அவர்களால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் #கலைஞர் எதிர்த்து குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை #சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, #கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா?
ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.#இராமராவ் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் #சந்திரபாபுநாயுடு ஆட்சியை கவிழ்த்து முதல்வரானது போல் #ஆதவ்அர்ஜூனா முதல்வராகி விடக்கூடாது என்ற பயத்தில் உங்களோடு #லண்டன் அழைத்து செல்கிறீர்களா #CMsir ? என தெரிவித்து உள்ளார்.