தரமற்றுப் போனது வெங்காயமா? தவெக வின் ஆட்சியா? - வேல்முருகன் கேள்வி

அரசின் நிர்வாகக் கட்டமைப்பை, அதலபாதாளத்தில் தள்ளுவது அமைச்சர்களா? முதல்-அமைச்சரா? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேல்முருகன் கேள்வி
Published on: 

சென்னை,

தரமற்றுப் போனது வெங்காயமா? தவெக வின் ஆட்சியா? அரசின் நிர்வாகக் கட்டமைப்பை, அதலபாதாளத்தில் தள்ளுவது அமைச்சர்களா? முதல்-அமைச்சரா? என பல்வேறு கேள்விகளை வேல்முருகன் எழுப்பி உள்ளார்.

கொள்முதல் நடவடிக்கையில் தரக்குறைபாடு

இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட கொள்முதல் நடவடிக்கையிலேயே தரக்குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழக அரசு, வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கியது.

அரசின் செய்திக்குறிப்பின்படி, முதல் மூன்று கட்டங்களில் மொத்தம் 2,498 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 2,380.32 மெட்ரிக் டன் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீதமிருந்த வெங்காய இருப்பும் சுமார் 25 நாட்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், தற்போது நியாயவிலைக் கடைகளில் வெங்காய விற்பனை நடைபெறவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பூஞ்சை பாதித்த வெங்காயங்கள்

இந்நிலையில், கூடுதலாக 400 மெட்ரிக் டன் வெங்காயத்தை கிலோ ரூ.29 என்ற விலையில் கொள்முதல் செய்து வழங்குவதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED நிறுவனத்துக்கு அக்டோபர் மாதம் கொள்முதல் மற்றும் விநியோக ஆணை வழங்கியிருந்தது.

இந்தக் கொள்முதலுக்கான வெங்காயம் 'ஏ' தரத்தில் இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 45 மில்லிமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2026 அக்டோபர் 31-ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டை முனையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, மாதிரி மூட்டைகளில் 20 முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் இருந்ததும், 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மில்லிமீட்டர் அளவுக்குக் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

விநியோக ஆணை ரத்து

இதையடுத்து, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், NAFED நிறுவனத்துக்கு வழங்கியிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை அக்டோபர் 31-ஆம் தேதி ரத்து செய்தது.

கொருக்குப்பேட்டை முனையத்தில் இருந்த தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அது கூட்டுறவுத் துறையால் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் அல்ல என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொறுப்பேற்கப் போவது யார்?

மக்களுக்காகக் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைக்கூட உறுதிப்படுத்த முடியாத அரசின் நிர்வாகம் எதற்காக?

மகாராஷ்டிரத்திலேயே தரக்குறைபாடு கண்டறியப்பட்டும், அத்தகைய சரக்கு தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது எப்படி? அதிகாரிகளின் கண்காணிப்பு எங்கே போனது?

தரத்திற்கான நிபந்தனைகளை மீறிய NAFED நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தரமற்ற வெங்காயத்தை அனுப்பியதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

அமைச்சரா? முதல்-அமைச்சரா?

நிராகரிக்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தற்போது எங்கே உள்ளது? அதன் இருப்பிடம், தற்போதைய நிலை மற்றும் ஏற்பட்ட நிதி இழப்பு குறித்த விவரங்களை அரசு ஏன் வெளியிடவில்லை?

ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்திற்கும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கும் அப்பாவி மக்கள் ஏன் பலியாக வேண்டும்? நிர்வாகச் சீர்கேடுகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட வேண்டுமா? கொள்முதல் ஆணையை ரத்து செய்வதோடு அரசின் கடமை முடிந்துவிடுமா?

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த விவகாரத்தில் NAFED நிறுவனத்திடமிருந்து விரிவான விளக்கம் பெற்று, ஒப்பந்த நிபந்தனைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் மற்றும் தரப் பரிசோதனை நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொருக்குப்பேட்டை முனையத்தில் இருந்த தரமற்ற வெங்காயச் சரக்கின் தற்போதைய இருப்பிடம், அதன் அளவு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு குறித்த முழுமையான தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மக்களின் வரிப்பணம் என்பது ஆட்சியாளர்களின் தனிப்பட்ட பணமல்ல. உழைக்கும் மக்களின் வியர்வையால் உருவான பொதுச் சொத்து. அதனைப் பாதுகாப்பதும், தரமான உணவுப் பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதும் அரசின் அடிப்படைக் கடமையாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X