ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா? - டிடிவி தினகரன் கண்டனம்

தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மதுரை மேற்கு தொகுதியில் ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவியாக வழங்கிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.R.தங்கப்பாண்டி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா ? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com