

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை நீளும் வெளிவட்டச் சாலை என்பது தமிழ்நாட்டின் பொருளாதார ஓட்டத்தைத் தாங்கி நிற்கும் முக்கியபா பொதுச் சொத்து. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சரக்குப் போக்குவரத்தையும் தொழில் வளர்ச்சியையும் வேகப்படுத்தும் இந்தக் கட்டமைப்பை, நீண்டகால வருமான உரிமையுடன் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்படுவது மிகுந்தக் கவலைக்குரியது.
தமிழ்நாடு அரசு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய உள்கட்டமைப்பின் பயனை, பல ஆண்டுகள் தனியார் நிறுவனம் அனுபவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது, எந்த வகையிலும் மக்கள் நல ஆட்சிக்கு ஏற்றதல்ல. இன்று கிடைக்கும் தொகையைக் காரணம் காட்டி, நாளைய தலைமுறைகளுக்குச் சொந்தமான தொடர்ச்சியான வருவாயைக் கைவிடுவது, பொருளாதார தொலைநோக்கின்மையின் வெளிப்பாடாகும்.
இந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தொழில் வளர்ச்சி, நகர விரிவாக்கம், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இத்தகைய மக்களுக்கு பயன் தரும் பொதுச் சொத்தை, மிகக் குறைந்த மதிப்பில் நீண்டகாலத்திற்கு தனியாரிடம் ஒப்படைப்பது, அரசின் நிதி நலனுக்கும் மக்களின் உரிமைக்கும் எதிரான நடவடிக்கையாகவே பார்க்கிறோம். பொதுச் சொத்துகளை தனியார் கைகளில் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விளக்கப்பட வேண்டும். சொத்தின் உண்மையான பொருளாதார மதிப்பு என்ன? வருங்கால வருவாய் கணக்கீடு என்ன? ஏன் அரசே பராமரிக்கக்கூடாது? என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு மக்களிடம் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சென்னை வெளிவட்டச் சாலைத் தொடர்பான தனியார் ஒப்பந்த முயற்சியை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிதி, தொழில்நுட்ப மற்றும் சட்ட விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகள், தலைமுறைத் தலைமுறையாக மக்களுக்கே பயன்பட வேண்டுமே தவிர, சில தனியார் நிறுவனங்களின் நீண்டகால இலாபத்திற்கான கருவிகளாக மாற்றப்படக் கூடாது. பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதும், மக்களின் பொருளாதார உரிமைகளை நிலைநிறுத்துவதும், அரசின் அடிப்படைப் பொறுப்பு என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.