லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா..? - டிடிவி தினகரன்

கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா..? - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல் - லஞ்சத்திற்கு எதிரான முதல்-அமைச்சரின் முழக்கம் நடைமுறைக்கு உதவாத வெறும் சினிமா வசனம் தானா? என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ரூ.50 வரை லஞ்சம்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி

ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கண்ணீர்

விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.

இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, த.வெ.க. அரசின் மீதான விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.

லஞ்ச வசூல் இன்றி

எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com