பா.ஜ.க.வை நெருங்குகிறதா தி.மு.க.? அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டியதன் பின்னணி என்ன?

அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் திடீரென கூட்டினார்.
பா.ஜ.க.வை நெருங்குகிறதா தி.மு.க.?
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தனது தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுதி மறுவரையறை

மக்களவை தொகுதி மறுவரையறையை மேற்கொள்வதற்காக மத்திய பா.ஜனதா அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவை, போதிய எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்ற, பா.ஜனதாவுக்கு அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவி தேவைப்படுகிறது.

தி.மு.க.வை நாடும் பா.ஜ.க.

இதில், தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுப்பிளவை, சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. தற்போது மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவியை பா.ஜனதா நாடுகிறது.

நிபந்தனையுடன் கூடிய உறவு

கூட்டணி உறவை சொல்லாமல் முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி மீது தி.மு.க. கசப்பில் உள்ளது. காங்கிரசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் சந்தர்ப்பமாக தி.மு.க. இதனை பார்க்கிறது. ஆக, பா.ஜனதாவுடன் தி.மு.க.வுக்கு நிபந்தனையுடன் கூடிய உறவுக்கான பாதி கதவு திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வின் மூத்த தலைவர்

மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு கோரி பா.ஜனதா. தங்களை அணுகியதை தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க. எதிரானதல்ல என்றும், அந்த நடவடிக்கை நியாயமான முறையில் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், முன்பு தி.மு.க.வின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்றும், தற்போது மீண்டும் பா.ஜனதா அணுகியபோது எங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க.வை நெருங்கும் தி.மு.க.?

இந்த சூழ்நிலையில்தான் அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் திடீரென கூட்டினார். இது, எந்தக் கட்சி பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்ட உள்ளது என்பதை வெளியுலகத்திற்கு காட்டுவதற்கான த.வெ.க.வின் ஏற்பாடாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏனென்றால், சட்டசபையில் கடந்த 7-ந்தேதி விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் 'எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங் கேற்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்படி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டார்.

அந்த நேரத்தில் அந்த கேள்வி, அவைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், அரசியலுக்கு தொடர்புடையதாக இருந்தது. இதில் த.வெ.க.வின் நோக்கம், பா.ஜனதாவை தி.மு.க. நெருங்குகிறதாக காட்டுவதாக உள்ளது என்றே கருதப்படுகிறது.

விவாதம்

ஆனால், அப்போதைய விவாதத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி தொடர்பில்லாதது என்று உதயநிதி பதில் அளித்திருந்தார். என்றாலும், மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை த.வெ.க. அரசு கூட்டினால், எம்.பி.க்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று பந்தை த.வெ.க. பக்கம் தி.மு.க. தள்ளிவிட்டது.

அரசியல் நாடகம்

மேலும், தொகுதி மறுவரையறையில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என்றும், எம்.பி.க்கள் கலந்தாய்வு என்று த.வெ.க. நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க. தரப்பில் இதுபற்றி கேட்டபோது, 'எம்.பி.க்களை அழைப்பதற்கு முன்பாக, கட்சித் தலைவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா..?

இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்காதது, மத்திய அரசின் மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் நிலையை நோக்கி அக்கட்சி நகர்வதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரசுடன் தி.மு.க.கூட்டணி முறிந்துள்ள நிலையில், இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com