

சென்னை,
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பா? பாசிசத்தின் காலடியில் மக்கள் சனநாயகமா? என வேல்முருகன் கேள்விகள் எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாகவும், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் சுயாதீன அமைப்பாகவும் விளங்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று நாடு முழுவதும் தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன.
Special Intensive Revision (SIR) என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில், தமிழ்நாட்டில் மட்டும் இறுதி வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்.-க்கு முன்பிருந்த எண்ணிக்கையைவிட 74 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் ‘இறந்தவர்கள்’ என்றும், சொந்த வசிப்பிடத்திலேயே இருந்தவர்கள் ‘இடம்பெயர்ந்தவர்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டு பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவங்களும் செய்தி ஆய்வுகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இத்தகைய தவறுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் பொறுப்பு? பாதிக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் எவ்வாறு மீண்டும் சேர்க்கப்பட்டன? இந்த நீக்கங்கள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? என்பதற்கு தேர்தல் ஆணையம் முழுமையான பதில் அளிக்க வேண்டும்.
மேலும், தற்போது தேர்தல் ஆணையத்தின் உள்நிலை செயல்பாடுகள் தொடர்பாக அதன் இரு ஆணையர்கள் சுக்பீர் சிங் மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், பல்வேறு ஆட்சேபணைகளை பதிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், இந்த விவகாரத்தில் மேலும் கேள்விகளை எழுப்புகின்றன.
இந்தப் பின்னணியில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும், தேர்தல் ஆணையம் பல்வேறு குளறுபடிகளைச் செய்திருக்கிறது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதோடு, அவர் பாஜகவை திருப்தி படுத்தவே வேலை செய்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், தமிழ்நாடு, மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அந்த மறுதேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் எழுப்பியுள்ள அடிப்படைக் கேள்விகள் கவனிக்கத்தக்கவை.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவையே மாற்றியமைத்திருந்தால், அந்தத் தேர்தல் முடிவை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே, எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா? என்பதை சுயாதீனமாக விசாரிக்க வேண்டும்.
அந்த விசாரணையில் தேர்தல் முடிவை பாதிக்கும் அளவிலான தவறுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல்களைச் சட்டப்படி ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும். அத்தகைய மறுதேர்தல் நடைபெற்றால், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயல்படக்கூடாது. அது மக்களின் வாக்குரிமையின் காவலனாக மட்டுமே இருக்க வேண்டும். தனது சுயாதீனத்தன்மை குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு வெளிப்படையான நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் மூலம் பதிலளிக்க வேண்டியது அதன் பொறுப்பு.
எனவே, எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக வெளியிட்டு, சுயாதீன விசாரணை நடத்தி, தவறுகள் தேர்தல் முடிவுகளை பாதித்திருப்பது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்து மறுதேர்தல் நடத்துவதுடன், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.