

சென்னை,
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் அரிசி மூட்டைகளின் விலை பல இடங்களில் ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்ததாகவும், பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரையும், சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.45 முதல் ரூ.50 வரையும் உயர்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விலை உயர்வை தினமும் கண்காணிப்பதாக ஆகஸ்ட் மாதமே அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தது. அப்படியானால், அடுத்தடுத்த மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தது எப்படி?
விலை கண்காணிப்பதன் நோக்கம் விலை உயர்ந்த பிறகு அதை பதிவு செய்வதா? அல்லது விலை உயர்வதற்கு முன்பே காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுப்பதா?
அக்டோபர் மாதத்தில் சன்ன ரக அரிசியின் வெளிச்சந்தை விலை கிலோ ரூ.75 முதல் ரூ.85 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு ஏற்படுவதற்கு முன்பே அரசின் கண்காணிப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்ததா? கிடைத்திருந்தால் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
மாவட்ட அளவிலும் விலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. அப்படியானால் எந்த மாவட்டங்களில் விலை உயர்வுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டன? எத்தனை இடங்களில் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது? எத்தனை பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?
அரிசி விலை கிலோ ரூ.75-ரூ.85 வரை உயர்ந்த பிறகு, சன்ன ரக அரிசியை கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்வதாக அரசு அறிவித்ததே. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? உண்மையில் மக்களுக்கு கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி வழங்கப்படுகிறதா? அல்லது இதுவும் வெற்று அறிவிப்புதானா? என்பதை தமிழக அரசு விளக்கப்படுத்த வேண்டும்.
அரசு தன்னுடைய விற்பனை நிலையங்களில் அரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பூண்டு, மல்லி, காய்ந்த மிளகாய் போன்றவற்றை சந்தை விலையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால் வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் அரசின் நிரந்தரச் செயல்திட்டம், செயலற்றுப் போய்விட்டதா?
அரசின் விலை கண்காணிப்புப் பிரிவு 67 அத்தியாவசியப் பொருட்களை தினசரி கண்காணிக்கிறது என்றால், அந்தக் கண்காணிப்பின் அடிப்படையில் எத்தனை முறை சந்தையில் அரசு தலையிட்டுள்ளது? எத்தனை விலை உயர்வுகள் தடுக்கப்பட்டுள்ளன?
விலை உயர்வுக்கு உற்பத்திக் குறைவு, வரத்து குறைவு, எரிபொருள் செலவு போன்ற காரணங்கள் இருப்பதாக அரசு கூறுகிறது. இந்த காரணங்கள் அரசுக்குத் தெரிந்திருந்தால், பிற மாநிலங்களில் இருந்து தேவையான அளவு பொருட்களை முன்கூட்டியே கொள்முதல் செய்து விலையைக் கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
விலைவாசி உயர்வால் மக்கள் தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களின் வாங்கும் அளவையே குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களின் கூடுதல் செலவுக்கு அரசின் நிவாரணத் திட்டம் என்ன?
விலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறுவது அரசின் சாதனையா? அல்லது விலையை கட்டுப்படுத்திவிட்டோம் என்பது அரசின் சாதனையா? விலையைக் கண்காணிக்கும் அமைப்பு அரசிடம் இருக்கிறது. மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களும் இருக்கின்றன. காலாண்டு ஆய்வுக் கூட்டங்களும் நடைபெறுவதாக அரசு தெரிவிக்கிறது.
ஆனால் இத்தனை கண்காணிப்பு அமைப்புகள் இருந்தும், மக்களின் அன்றாட வீட்டு உபயோக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், கண்காணிப்பு அமைப்பின் பயன்தான் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
விலை உயர்ந்த பிறகு அரசு தலையிடுவது மட்டும் போதாது. விலை உயர்வுக்கான காரணத்தை முன்கூட்டியே கண்டறிந்து, பதுக்கல் மற்றும் செயற்கை விலை உயர்வைத் தடுத்து, போதுமான வரத்து மற்றும் நியாயமான விலையை உறுதி செய்வதே அரசின் உண்மையான பொறுப்பு.
எனவே, தமிழக அரசு வெறும் விலையை கண்காணித்து வருகிறோம் என்ற வெற்று பதிலை மீண்டும் மீண்டும் கூறாமல், எப்போது விலை உயர்வை கண்டறிந்தது?, என்ன நடவடிக்கை எடுத்தது?, யார் மீது நடவடிக்கை எடுத்தது?, அந்த நடவடிக்கையால் விலை எவ்வளவு குறைந்தது? என்பதற்கான முழுமையான கணக்கை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.