அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவி புதுமைப்பெண் திட்டம் பயன்தருகிறதா? மாணவிகள் கருத்து

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா என்பது பற்றி மாணவிகள், பேராசிரியர் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவி புதுமைப்பெண் திட்டம் பயன்தருகிறதா? மாணவிகள் கருத்து
Published on

மாதம் ரூ.1,000 உதவித்தொகை

பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.

ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.

புதுமைப்பெண் திட்டம்

இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.

அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

3-வது தவணையாக...

விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு சரியாக கிடைக்கிறதா? அந்த தொகை எந்த அளவுக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? என்பது குறித்து திட்டத்தில் பயன்பெற்ற மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

ரொம்ப உதவியாக இருக்கிறது

மாணவி கிருத்திகா கூறுகையில், 'உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தபோது முதல்-அமைச்சர் கையில் அதற்கான ஏ.டி.எம். அட்டையை பெற்றேன். அது எனக்கு பெருமையாக இருந்தது. தற்போது அந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகையையும் பெற்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் அதற்கான உதவித்தொகையை அரசு எனக்கு வழங்கியிருக்கிறது. இதில் ஒரு மாத தொகையை தேர்வு கட்டணத்துக்கு பயன்படுத்திக்கொண்டேன். மற்றொரு மாத உதவித்தொகையை சேமிப்பில் வைத்துள்ளேன். இந்த உதவித் தொகை எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது' என்றார்.

 கலைக் கல்லூரியில் 3-வது ஆண்டு படிக்கும் மாணவி ஜெனிபர் கூறும்போது, 'புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவித்தொகை ரொம்ப உதவியாக உள்ளது. கல்லூரிக்கு தேவையான கட்டணங்கள் செலுத்துவதற்கும், படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கும், அறிவியல் ரெக்கார்டு நோட்டுகள் வாங்குவதற்கும் உதவித்தொகை பயன்படுகிறது. இந்த திட்டத்தால், அப்பா, அம்மாவை பணத்துக்கு தொந்தரவு செய்யாமல், நானே இந்த தொகையின் மூலம் வாங்கிவிடுகிறேன். மீதமுள்ள தொகையை சேமிக்க உள்ளேன்' என்றார்.

பெருமையாக நினைக்கிறோம்

மாணவி பவதாரணி கூறுகையில், பெண் குழந்தைகளை செலவு செய்து படிக்க வைக்க வேண்டுமா? என்று நினைப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களும் இந்த திட்டத்தின் வாயிலாக தங்கள் பிள்ளைகளை உயர்கல்வியில் படிக்க வைக்க முன்வருவார்கள். இது ஒரு நல்ல திட்டம். திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 2 மாதத்துக்கான உதவித்தொகையை பெற்றுள்ளேன். அதில் சில குறிப்பிட்ட தொகையை கொண்டு, நான் கூடுதல் படிப்பை கற்பதற்கான கட்டணத்தை செலுத்தியிருக்கிறேன். இனி வரும் தொகையை சேமித்து வைத்து எதிர்கால உயர்கல்விக்கு பயன்படுத்துவேன்' என்றார்.

இதேபோல் மாணவிகள் காயத்ரி, பூஜா ஆகியோர் கூறும்போது, 'இந்த திட்டம் அரசு பள்ளியில் படித்ததால் மட்டுமே எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆகவே நாங்கள் அரசு பள்ளியில் படித்ததை பெருமையாக நினைக்கிறோம். இந்த உதவித் தொகை எங்களுடைய படிப்புக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுகிறது. எங்களுடைய பெற்றோருக்கும், எங்களுக்கும் இந்த தொகை மிகவும் பிரயோஜனமாக உள்ளது' என்றனர்.

படிப்பில் அதிக நாட்டம்

இதுகுறித்து ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி துறைத்தலைவர் பாவை மாதேஸ்வரி கூறுகையில், 'அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பொருளாதாரத்தில் நலிந்த மாணவிகளின் உயர்படிப்புக்கு உதவும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மிக மிக வரவேற்புக்குரியது. மாணவிகளுக்கு தங்களை பற்றிய தன்னம்பிக்கையை இந்த ரூ.1,000 திட்டம் ஏற்படுத்துகிறது. அவர்களின் செலவுகளை சந்திக்க ரூ.1,000 உதவித்தொகை உதவுகிறது. பல மாணவிகள் தங்களுக்கு தேவையான உடைகள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை இந்த தொகையில் வாங்கி, மீதம் பணத்தை மிச்சப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. ஒரு தகப்பனார் தன் பிள்ளைக்கு செலவுக்கு ரூபாய் வழங்குவதுபோல முதல்-அமைச்சரால் வழங்கப்படும் திட்டம் அவர்களின் வாழ்க்கைக்கு கைக்கொடுக்கிறது. இதனால் மாணவிகளுக்கு மனதில் தெம்பு ஏற்படுவதோடு, படிப்பிலும் அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

குற்றச்சாட்டு

புதுமைப் பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான உதவித்தொகை மாணவிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு அக்டோபர் மாதத்துக்கான தொகை வரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அரசு ஒதுக்கிய நிதிகள் பல்வேறு கட்டங்களாக விடுவிக்கப்படுவதால் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிதி தாமதம் ஆகிறது என்றும், இந்த மாதத்துக்கான தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும், இனி வரக்கூடிய மாதங்களில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி, ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதியே வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com