3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? - எல்.முருகன் கண்டனம்

நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இணை மந்திரி எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அதிர்ச்சி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பியதால் ஆளும் தவெக அரசு, எதேச்சாதிகார போக்குடன் 3 சேனல்களையும் முடக்கியுள்ளது.

4 ஆவது தூணான ஊடகங்கள்

ஜனநாயகத்தின் 4 ஆவது தூணான ஊடகங்கள் தான், அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுத்து விட முடியும் என தவெக அரசு எண்ணுகிறது.

ஜனநாயகத்திற்கும் எதிரானது

3 சேனல்கள் முடக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் செயலற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசு, ஊடகங்களை முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசு தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் எதிலும் உண்மையில்லை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை தவெக அரசு கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com