தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?: அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி


தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?: அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு  கேள்வி
x
தினத்தந்தி 24 Jun 2025 3:06 PM IST (Updated: 24 Jun 2025 4:01 PM IST)
t-max-icont-min-icon

விசாரணையை ஜூன் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற கே.டி.வி. ஹெல்த் புட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சமையல் எண்ணெய் சப்ளை செய்தது. இந்த வகையில், ரூ.141 கோடியே 22 லட்சம் அரசு தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளதாகவும், டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகையை வழங்க வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என கே.டி.வி. நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருவதால் இத்தொகை ரூ.200 கோடிக்கு மேல் அரசு தர வேண்டியுள்ளதாகவும், தொகையை வழங்காமல் அடுத்த டெண்டர் கோரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "கடந்த இரு வாரங்களாக ஓய்வுக்கால பலன்கள் வழங்கப்படவில்லை; அரசு வழங்கவேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என குறிப்பிட்டார்.

மேலும், "மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு முன்னுதாரணமாக திகழவேண்டும். வழங்க வேண்டிய தொகைகள் வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? வழங்க வேண்டிய தொகைகளை வழங்க வேண்டாம் என இருக்கிறதா? அல்லது மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?" என அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இது அரசை நடத்தும் வழியல்ல; அரசின் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

1 More update

Next Story