

சென்னை,
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை, அரிவாள் வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை. தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே காவலாளி ஒருவருக்கு அரிவாள் வெட்டு என, ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
திருவிழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் பகுதிகள் என பொதுமக்கள் இயல்பாகச் செல்லும் இடங்களில்கூட வன்முறை நிகழும் சூழல் உருவாகியிருப்பது, மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
கொலை நடந்த பிறகு குற்றவாளிகளைத் தேடுவதும், கைது செய்வதும் மட்டும் காவல்துறையின் செயல்பாடாக இருக்க முடியாது. குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதும், பதற்றமான பகுதிகளைக் கண்காணிப்பதும், பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதுமே அரசின் முதன்மையான கடமை.
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களை அரசு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது?. மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும், காவல்துறையின் செயல்பாட்டைத் தீவிரப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.
மக்களின் உயிரைப் பாதுகாப்பது ஆட்சியின் அடிப்படைக் கடமை என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.