

சென்னை,
தமிக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், தவெகவின் மாவட்ட இளைஞரணி இணை செயலாளரான சரவண குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒட்டுமொத்த கொள்ளை சம்பவத்திற்கும் இந்த தவெக நிர்வாகி தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்ற கூடுதல் தகவல், ஒருவித அச்சத்தை நம்முள் படரச் செய்கிறது.
ஒரு வீட்டை தொடர்ந்து நோட்டமிட்டு, அங்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதையெல்லாம் குறித்து வைத்து, ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது உள்ளே புகுந்து கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுக்கும் கைதேர்ந்த குற்றவாளிக்கு, தவெக கட்சி எதன் அடிப்படையில், இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தது? பின்புலத்தை ஆராயாமல் கட்சியில் பதவி கொடுத்து விட்டு, பின்பு குற்ற வழக்கில் சிக்கியதும் கட்சியை விட்டு நீக்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? “தவெகக்காரன்” என்ற முகமூடியை அணிந்து கொண்டு இன்னும் எத்தனை கொள்ளையர்கள், பாலியல் குற்றவாளிகள் மக்களிடையே உலவிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
எனவே, சட்டம், ஒழுங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சர் விஜய், முதலில் தனது கட்சிக்குள் இருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து, தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.