தமிழ்நாட்டின் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு கைமாறுவது கவலையளிக்கிறது: எஸ்டிபிஐ கட்சி

தொழில்துறை வளர்ச்சியை உறுதிப்படுத்த தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
எஸ்டிபிஐ கட்சி
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டின் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு கைமாறுவது கவலையளிக்கிறது என அகமது நவவி தெரிவித்துள்ளார்.

பேரபாயமாக அமையும்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் தென்கொரியாவின் மூன்று முன்னணி நிறுவனங்கள், ரூ.1,600 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைத் தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்குப் பதிலாக ஆந்திர மாநிலத்தைத் தேர்வு செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

இயற்கைப்புயல்கள் கரையை கடக்க ஆந்திராவை நோக்கி நகர்வதைப் போல, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளும் மாநிலத்தைக் கடந்து அயல்மாநிலங்களை நோக்கிச் செல்வது, தமிழகத்தின் பொருளாதார எதிர்காலத்திற்குப் பேரபாயமாக அமையும்.

கைநழுவிய முதலீடுகளை மீட்டெடுக்கவும்

ஏற்கனவே காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தானியங்கி நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ள சூழலில், ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் மாநிலத்தின் கணிசமான வருவாயையும் உறுதி செய்யக்கூடிய இந்த முதலீடுகள் கைநழுவிப் போயிருப்பது, தற்போதைய ஆட்சியாளர்களின் தொழில்துறை அணுகுமுறையைக் கேள்விக்குறியாக்குகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் முதலீடுகளை ஈர்த்து தக்கவைக்கும் நிலையான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்.

எனவே, தமிழக அரசு இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, முதலீட்டாளர்களும் தொழில் நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையிலான தொழில் தோழமைச் சூழலை உருவாக்க வேண்டும். கைநழுவிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், வருங்காலத் தலைமுறையின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X