கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது - ஆ.ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்


கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது - ஆ.ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
x

கோப்புப்படம் 

மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த தி.மு.க. எம்.பி. ஆ. ராசா, நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் நமது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.

கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாசாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் நமது மத்திய உள்துறை மந்திரியைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

அதுசரி, தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், "நாம் தான் நம்பர் 1 முதல்வர்" என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத்தான் தெரிவார்கள், மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story