தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல - சென்னை ஐகோர்ட்டு

தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல - சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் செவிலியர் ஒருவரை தாக்கியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து நடராஜ தீட்சிதர் அறநிலையத் துறை இணை ஆணையரிடம் முறையீடு செய்தார். அதை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு செயலாளரான வெங்கடேச தீட்சிதர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பொது தீட்சிதர் குழு எடுத்த முடிவில் தலையிட அறநிலைத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்த இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு சிதம்பரம் நடராஜர் கோவில் தங்களுக்குச் சொந்தமானது என்பது போன்ற நினைப்பில் பொது தீட்சிதர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர். நீதிமன்றம்தான் இதை கட்டுப்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தீட்சிதர்களால் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டது. மனக்கஷ்டங்களை போக்குவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவிலில் அவமானப்படுத்துவது, வேதனையளிக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல. நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லோரும் தங்களுடன் சண்டைக்கு வருவது போல தீட்சிதர்கள் நினைக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக் கூடாது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்தப்படும் ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது.

தீட்சிதர்களின் செய்கையால் சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்துக்கு முன்புபோல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இதேநிலை நீடித்தால் பக்தர்கள் வருகை குறைந்து பழமையான நடராஜர் கோவில் பாழாகி விடும். கோவிலில் காசு போட்டால் மட்டுமே பூ கிடைக்கிறது. இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.21-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com