

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளரக்ளுக்குப்பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது; மேட்டூர் அணையில் இருந்து வரும் 1 ஆம் தேதி முதல்வர் விஜய் தண்ணீர் திறந்துவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என்ற நீர்வளத்துறை அமைச்சரின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நாட்களில் எந்த பயிருமே பயிரிட முடியாது. 120 முதல் 150 நாட்கள் நீர் கிடைத்தால் மட்டுமே சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியும். 90 அடியாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. சம்பா சாகுபடியாவது முழுமையாக நடைபெறுவதற்கு உரிய உத்தரவாதமான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும். 45 நாட்கள் தண்ணீர் திறப்பதால் நெற்பயிரிடவே முடியாத நிலை ஏற்படும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு மாதவாரியாக உரிய நீரை வழங்காமல், அணைகள் நிரம்பும்போது உபரி நீரை மட்டுமே வழங்கி ஏமாற்றுகிறது . தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் ஓசூர் விமான நிலைய விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சண்முகம் கூறியதாவது: , முப்போகம் விளையும் விளைநிலங்களை வேறு திட்டங்களுக்குக் கையகப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. விவசாயத்திற்கு பயன்படாத அத்தகைய நிலங்களைக் கண்டறிந்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாய நிலத்தை கையகப்படுத்துவோம் என்று செங்கோட்டையன் கூறியது ஏற்புடையது அல்ல. செங்கோட்டையனின் கருத்து விவசாயிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரிகளில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் போராட்டங்களைக் கண்காணிக்கச் சொல்லி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முழு காரணம் தலைமைச் செயலாளர்தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்” என்றார்.