நரேந்திர மோடி போன்ற நேர்மையான தலைவர்களை பார்ப்பது அரிது ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

நரேந்திர மோடி போன்ற நேர்மையான தலைவர்களை பார்ப்பது அரிது என்று ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.
நரேந்திர மோடி போன்ற நேர்மையான தலைவர்களை பார்ப்பது அரிது ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
Published on

சென்னை,

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

காவிரி படுகையில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த முக்கிய திட்டமான கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதரவோடு, தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலனாக காவிரி நீர் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு அளித்த இந்த வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பினை ஒருபோதும் மறக்கமாட்டோம். மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்கு சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ஒளிரும் உதாரணமாக திகழ்கிறது. நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழகத்துக்கு முழுமையான பலன்களை கொடுக்கும், மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி அறிவித்ததற்காக, நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆராய்ச்சி வளாகம் அமைப்பதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை ஐ.ஐ.டி.க்கு 163 ஏக்கர் நிலம், மிகுந்த கருணையோடு, இலவசமாக வழங்கினார். சென்னை ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி' வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

பிரதமருக்கு நன்றி

பாதுகாப்பு கருவிகள் தொடர்பான பல உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அலகுகள் தமிழகத்தில் இருப்பது, எங்களுக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில், அர்ஜூன் மார்க் 1-ஏ டாங்கியை, இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசத்தின் பாதுகாப்பில் தமிழகம் முன்னணியில் திகழ்கிறது. தமிழகத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 2 முக்கிய ரெயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார். இதற்காக பிரதமருக்கும், தெற்கு ரெயில்வேக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் உயர்ந்த இடத்துக்குச் செல்லும்

பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டுள்ள, தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பரந்த அளவில் முன்னேற்றத்தை நன்கு நிரூபிப்பதாக இருக்கின்றன. அவை உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் உயர்கல்வியில் மத்திய-மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுவதையே பிரதிபலிக்கிறது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த ஒத்துழைப்பு உணர்வை மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பதன் மூலம் தமிழகம் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்லும் என்று நம்புகிறேன்.

ஒழுக்கமான, கண்டிப்பான மற்றும் திறமையான அரசியல்வாதியாக அறியப்படும் பிரதமர் நரேந்திர மோடி, தேசத்துக்கு சேவை செய்வதற்கு உறுதி பூண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், அவருடைய உணர்ச்சிவசப்பட்ட உரையில் பிரதமர் நரேந்திர மோடி கருணை மற்றும் இரக்கம் நிறைந்தவர் என்பதை நாம் பார்த்தோம்.

நேர்மையான தலைவர்

நரேந்திர மோடி போன்ற நேர்மையான தலைவர்களை தற்போது பார்ப்பது என்பது அரிது. அவர் நம்முடைய நாட்டுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம் ஆகும்.

கூட்டாட்சி முறையில் தேசத்தை வழிநடத்துவதற்கு, தமிழகத்துக்கு உதவ 2016-ம் ஆண்டு வழங்கியது போன்று, அ.தி.மு.க. அரசுக்கு தங்களுடைய முழுமையான ஆதரவை தமிழக மக்கள் தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழக மக்கள் இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com