கொரோனா தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பது அநியாயம் - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பது அநியாயம் - திமுக தலைவர் ஸ்டாலின்
Published on

சென்னை,

கொரோனா தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பது அநியாயம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

கொரோனா தொற்றின் 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. மே மாதம் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று வெளிவரும் தகவல்கள் அச்சத்தை அளிக்கின்றன. தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

வடமாநிலத்தில் இருந்து வரும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்து வருகிறது. கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. தற்போது முதல் தவறை விட பெரியதாக இரண்டாவது தவறையும் செய்துவிட்டார்கள்.

முதல் மற்றும் இரண்டாவது பரவல் இடையே மத்திய, மாநில அரசுகள் எந்த தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதன் விளைவுதான் இப்போது நாம் பார்த்து வருகிறோம். கொரோனா 2வது அலை மக்களை தாக்கி கொண்டியிருக்கும் நேரத்தில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டியிருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரித்த பிறகும் மத்திய அரசு அதனை அலட்சியம் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை உயர்த்தி இருப்பது அநியாயம். மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான சுமையை சுமக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும். மேலும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பிரதமர் அறிவித்து, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com