

சென்னை,
நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது அதிமுக தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று. நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு தான் என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.