

கோவை,
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தி.மு.க. துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், தி.மு.க.வின் ஆதரவுடனும், அக்கட்சித் தொண்டர்களின் உழைப்பிலும், அவர்களது பணத்திலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர்தான் தி.மு.க.வுக்கு துரோகம் செய்துள்ளனர். தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களே, தி.மு.க. துரோகம் செய்துவிட்டதாகப் பேசுவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எங்கு செல்வாக்கு இருக்கிறது, அதன் பலம் என்ன, வாக்கு சதவீதம் எவ்வளவு என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க.வின் ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டு, அந்தக் கட்சியையே துரோகம் செய்ததாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் தி.மு.க. நிபந்தனைகளுடன் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கு இல்லை. தமிழகமும் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படவில்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலையே தற்போதும் தொடர்வதாக விமர்சித்தார். திருப்பரங்குன்றத்தில் கல் தூணில் தீபமேற்றுவதற்கு அப்போதைய தி.மு.க. அரசு பிடிவாதம் காட்டியது. தற்போதைய தவெக அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் தற்போது தீபம் ஏற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
நாட்டில் 50 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தொகுதி மறுவரையறையை கொண்டு வர ஆதரவு தெரிவித்ததற்காக தி.மு.க.வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி என வானதி சீனிவாசன் கூறினார்.