

சென்னை,
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2026-27ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிம் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5 ஆயிரத்து 432 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
இதனிடையே, ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு 2 முதல் 3 நாட்களுக்கு முன்பாகவே வினாத்தாள் கசித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் தற்போது வெளிவந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு உள்ளிட்டவற்றால் தேர்வு எழுதிய மாணவ- மாணவியர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீட்டில் மோசடி இல்லை... நீட்டே மோசடிதான் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல் - அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.