திருச்சி அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 28 பேர் காயம்

708 காளைகளும், 293 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டன.
திருச்சி,
திருச்சியை அடுத்த மணிகண்டம் ஒன்றியம், நவலூர்குட்டப்பட்டில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயம், அறவாயி அம்மன், குன்னி மரத்தான் மற்றும் கிராம காவல் தெய்வங்கள் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, மேலூர், மணப்பாறை, சிவகங்கை, விராலிமலை, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 708 காளைகள் அழைத்துவரப்பட்டன.
இதேபோல் காளைகளை பிடிக்க 293 பேர் அனுமதிக்கப்பட்டனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5.45 மணி வரை நடைபெற்றது. இதில் துள்ளிக்குதித்து வந்த காளைகள் முட்டியதில் வீரர்கள் 11 பேரும், உரிமையாளர்கள் 9 பேரும், பார்வையாளர்கள் 8 பேரும் என மொத்தம் 28 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும் கட்டில், மெத்தை, டிரெஸ்ஸிங் டேபிள், மிக்சி, பிரிட்ஜ், மின்விசிறி, சைக்கிள், டி.வி., ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.






