'ஜனநாயகன்' வெளியான இன்றைய நாளே எங்களுக்கு பொங்கல் - ரசிகர்கள் உற்சாகம்

6 மாத தாமதத்திற்கு பிறகு 'ஜனநாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
'ஜனநாயகன்' வெளியான இன்றைய நாளே எங்களுக்கு பொங்கல் - ரசிகர்கள் உற்சாகம்
Published on

சென்னை,

ரசிகர்கள் ஏமாற்றம்

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகை வெளியீடாக கடந்த ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அப்போதே, என்றைக்கு 'ஜனநாயகன்' திரைக்கு வருகிறதோ, அன்றைய நாளே எங்களுக்கு பொங்கல் என்று கூறினார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிய நேரத்தில், 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இணையத்தில் வெளியானது

பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம், இப்படி இணையத்தில் வெளியாகிவிட்டதே என்று தயாரிப்பாளர் தரப்பு உள்பட விஜய் ரசிகர்களே அதிர்ந்து போனார்கள். 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இன்றைய நாளே பொங்கல்

இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின்னர், 'ஜனநாயகன்' படத்திற்கு இருந்த சிக்கல், ஒன்வொன்றாக அகன்றது. இறுதியாக படத்திற்கு 'ஏ' தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 6 மாத தாமதத்திற்கு பிறகு 'ஜனநாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகத்தில் காலை 6 மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 1,000 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 'ஜனநாயகன்' வெளியான எல்லா திரையரங்குகளிலும் விஜய் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து வருகின்றனர். பைக், கார் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை ஒட்டி, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், ஜனநாயகனைக் காண தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள் விஜய்யின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி, இனிப்புகளை வழங்கியும் ஆரவாரம் செய்து வருகின்றனர். 'ஜனநாயகன்' வெளியான இன்றைய நாளே தங்களுக்கு பொங்கல் பண்டிகை என்று மகிழ்ச்சி பெருக்கோடு கூறினார்கள்.

கவனத்தை ஈர்த்த பேனர்

நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை முதல்-அமைச்சர் விஜய் நடித்த படங்கள் அடங்கிய ஒற்றை பேனர் ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைபோல தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தவெக பாடல் போட்டு ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடினர்.

ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள்

சென்னை ரோகிணி திரையரங்கில் முதல்-அமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் பட முதல் காட்சியை அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் கண்டு ரசித்து வருகின்றனர். ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் அமைச்சர் அருண்ராஜ் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். இதைபோல புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் ஆனந்த கண்ணீர் சிந்தியபடி ஜனநாயகன் படத்தை பார்த்தார் அமைச்சர் முகமது பர்வேஷ்.

கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் ஜனநாயகன் படத்தை பார்த்தார். குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஜனநாயகன் படம் பார்த்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com