4 மாநிலங்களில் கைவரிசை - சினிமா படம் தயாரித்தார், நகை கொள்ளை கும்பல் தலைவன் திருவாரூர் முருகன் பற்றிய பரபரப்பு தகவல்

நகை கொள்ளை கும்பல் தலைவன் திருவாரூர் முருகன் 4 மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளார், சினிமா படம் தயாரித்துள்ளார் என்ற பரபரப்பு தகவல் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.
4 மாநிலங்களில் கைவரிசை - சினிமா படம் தயாரித்தார், நகை கொள்ளை கும்பல் தலைவன் திருவாரூர் முருகன் பற்றிய பரபரப்பு தகவல்
Published on

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையை நடத்தியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் தலைவன் திருவாரூர் முருகன் பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூரை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி. இவர், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு கொள்ளை கும்பலும் தனித்தனி முறைகளை கையாளுவார்கள். ஆனால் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் ஒருமுறை திட்டமிட்டு களத்தில் இறங்கி விட்டால் வெற்றிகரமாக கொள்ளையடித்து விட்டு தான் திரும்புவார்கள்.

கடந்த 2008-ம் ஆண்டு முருகன் தனக்கென கொள்ளை கும்பலை உருவாக்கி கொண்டு, முதன்முதலில் பெங்களூருவில் கைவரிசை காட்ட தொடங்கினார். அப்போது 2011-ம் ஆண்டு பெங்களூரு போலீசார் ஒரு கொள்ளை வழக்கில் முருகனை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது இருப்பிடத்தை ஐதராபாத்துக்கு மாற்றினார். அங்கு சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய முருகன் அங்கு அக்கம்பக்கத்தினரிடம் தான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறி உள்ளார்.

திரைப்படங்களை விரும்பி பார்க்கும் முருகன், திரைப்பட தயாரிப்பாளராவதையே தனது லட்சியமாக கொண்டு இருந்தார். அதேநேரம் வங்கிகளிலும், நகைக்கடைகளில் புகுந்து லாவகமாக கொள்ளையடிப்பதிலும் முருகனுக்கு நாட்டம் இருந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் தெலுங்கானா மாநிலத்தில் பாலன்நகரிலும், அதேஆண்டு டிசம்பர் மாதம் மக்பூப்நகரிலும் முருகனின் கொள்ளை கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

இந்த கும்பலிடம் இருந்து ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்த முருகன் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் 17 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, திருவாரூர் முருகன், தினகரன், கோபால், ரகு உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் மீண்டும் ஜாமீனில் வந்த முருகன், தனது கைவரிசையை மீண்டும் காட்ட தொடங்கியுள்ளார். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையிலும் முருகன் தலைமையிலான கும்பலே ஈடுபட்டு இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். கொள்ளையடிக்க செல்லும்போது முருகன் செல்போன் பயன்படுத்துவது இல்லை. லாட்ஜ்களில் தங்குவதும் இல்லை. காரிலேயே இருந்து கொண்டு அனைத்து காரியத்தையும் கச்சிதமாக முடித்து விடுவார். மேலும், தான் செல்லும் இடங்களுக்கு காரிலேயே சமையல் பாத்திரங்கள், சிறிய அடுப்பை எடுத்து சென்று ஆங்காங்கே சாலையோரம் காரை நிறுத்தி சமைத்து சாப்பிடுவாராம்.

மெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார். கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். தன்னுடைய கொள்ளை பாவத்துக்கு பரிகாரம் தேடும் வகையில் முருகன் 2 ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முருகனுக்கு திரைப்படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தில் ரூ.50 லட்சம் செலவில் ஒரு தெலுங்கு படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தில் தனது அக்காள் மகன் சுரேஷூம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இறுதிவரை திரைக்கு வரவே இல்லை.

பின்னர் மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்காக பணத்தேவை ஏற்பட்டுள்ளது. அப்போது தான் தெலுங்கானாவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி போலீசாரிடம் சிக்கி கொண்டார். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். ஆனால் நிதி நெருக்கடியால் தொடர்ச்சியாக நிறுவனத்தை நடத்த முடியாமல் மூடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com