சிங்கப்பூரில் வேலை: இளம்பெண்களை ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டல்- பட்டதாரி பெண் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கிருந்த பட்டதாரி பெண் ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி ரூ.24 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் வேலை: இளம்பெண்களை ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டல்- பட்டதாரி பெண் கைது
Published on

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 24). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு மலேசியாவை சேர்ந்த ரேகா, சென்னையை சேர்ந்த துர்கா மற்றும் ஐஸ்வர்யா போன்றோர் தோழிகளாக அறிமுகம் ஆனார்கள். இந்த நிலையில், ஐஸ்வர்யா அவரது தந்தைக்கு அவசர ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினார். தோழிகளான நாங்கள் அவருக்கு அடிக்கடி பணம் உதவி செய்து வந்தோம். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்ப்பதாகவும், தன்னால் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தர முடியும் என்றும் கூறினார்.

நான் சென்னையில் பிரபல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்தேன். இதனால் ஐஸ்வர்யா சொன்ன வேலையில் சேர எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் சிங்கப்பூரில் செயல்படும் அந்த நிறுவனத்தில் மாதம் 4 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஐஸ்வர்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர சம்மதித்தேன்.

என்னோடு இணைந்து ரேகாவும், துர்காவும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர சம்மதித்தார்கள். சிங்கப்பூர் வேலைக்கு செலவீனங்கள் உள்ளதாக ஐஸ்வர்யா எங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வசூலித்து வந்தார். மொத்தமாக ரூ.24 லட்சம் வரை நாங்கள் பணம் கொடுத்துவிட்டோம். திடீரென்று துர்கா மட்டும் வேலை வேண்டாம் என்று கூறி விலகிவிட்டார்.

ஐஸ்வர்யா பெரிய அளவில் நாடகமாடி எங்களிடம் இருந்து ரூ.24 லட்சத்தை மோசடி செய்துவிட்டார். அவரும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று தெரியவந்தது. எங்களுக்கு போலியான பணி நியமன ஆணை கொடுத்து அவர் திட்டமிட்டு எங்களை ஏமாற்றி விட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது தரமணி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவை(28) கைது செய்தனர். விசாரணையில் அவர் கரூரை சேர்ந்தவர் என்பதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதி ஒன்றில் தங்கிருந்ததும் தெரியவந்தது. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் இதுபோல் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com