விஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு

விஷ சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
விஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கேமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் கள்ளச் சாராயம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இதனிடையே, வரும் 22-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜனதா அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com