

சென்னை,
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள்விக்னேஷ். ஆளும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த இவர், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு கடந்த ஜூலை மாதம் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கலெக்டர் புகார் கொடுத்தார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷனாஸ், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நவம்பர் 23-ந் தேதி முறைப்படி புகார் பெறப்பட்டு, அருள் விக்னேஷ் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக நவம்பர் 24-ந் தேதி ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ்சை நியமித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அவரது விசாரணையை காவல்துறை நிர்வாகப்பிரிவு ஐஜி என்.காமினி கண்காணிக்கவும் உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் 22-ந் தேதிக்குள் இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று (நவம்பர் 25-ந் தேதி) ஸ்ருஷ்டி சிங் தமது விசாரணையை தொடங்கினார். அருள் விக்னேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். காவல்துறை விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூத்த ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட உள்ளகப் புகார்கள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பான அந்த மனுவில், “கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பது வழக்கின் விசாரணை முறையாக நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆளும் கட்சி என்பதால் எம்.எல்.ஏ.வை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக புகார் கூறப்படும் நிலையில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆகையால் இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி கவர்னர் அர்லேகரிடம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.