கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் நாளை மதுரை புறப்படுகிறார் அழகர்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் நாளை மதுரை புறப்படுகிறார் அழகர்
Published on

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும். மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான கள்ளழகர் கோவிலில் இந்த விழா தொடங்கும்.

தற்போது சித்திரை திருவிழா மதுரையில் விமரிசையாக நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கி ழமை) மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், மாசி வீதிகளில் தேரோட்டம் நாளையும் நடக்கின்றன.

இதற்கிடையே மதுரை அருகே அழகர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக மாலை 5.35 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகருக்கு காப்பு கட்டுதல் வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து வீதி உலா வந்தார். இன்றும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

இந்த நிலையில், நாளை மாலையில் (29-ந் தேதி) கள்ளர் வேடம் தரித்து, தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை புறப்படுகிறார். நாளை மறுநாள் (30-ந் தேதி), அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில், தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

2-ந் தேதி சேஷ வாகனத்தில் வண்டியூர் மண்டகப்படியில் எழுந்தருள்கிறார். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். தொடர்ந்து கருட வாகனத்தில் பவனி வந்து காட்சி தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 3-ந் தேதி மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். 4-ந் தேதி அழகர்மலை நோக்கி மதுரையில் இருந்து புறப்பட்டு, 5-ந் தேதி இருப்பிடம் சேருகிறார்.

மதுரை வரும் அழகர் எழுந்தருள தங்கக்குதிரை, சேஷ, கருட வாகனங்கள் ஆண்டுதோறும் அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி டிராக்டர்களில் 3 வாகனங் களும் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், கருட வாகனம், சேஷ வாகனங்கள் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com