கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
- சென்னை,
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வான உறுப்பினர்களான தி.மு.க.வைச்சேர்ந்த மூத்த வக்கீல் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவி இடங்களும், அ.தி.மு.க.வைச்சேர்ந்த சந்திரசேகர், பா.ம.க.வின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவி காலம் அடுத்தமாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அந்த 6 இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, கடந்த 2-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஒரு எம்.பிக்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பது அவசியம். இதன்படி, திமுகவிற்கு 4 இடங்களும் அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஒரு இடத்தை மக்கள் நீதிமய்யத்திற்கு ஒதுக்கியது. திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தி.மு.க. கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று தி.மு.க. தரப்பு வேட்பாளர்கள் வில்சன், கமல்ஹாசன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதில், இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல் வேட்புமனுவுடன் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி எனவும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ., லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது என்றும், தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.305.55 கோடி என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.






