

சென்னை,
காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவு திட்டத்தை விருதுநகரில் செப்டம்பர் 17-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1.45 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர்.
அதன்பிறகு, இந்த திட்டம் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின்னர், 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது, த.வெ.க. அரசு புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை செப்டம்பர் 17-ந் தேதி முதல் விரிவாக்கம் செய்வதாக அறிவித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திட்டத்திற்கான பெயரையும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றினார்.
இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக ரூ.343 கோடி நிதி செலவிடப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் (2026-27) ரூ.217 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் கடந்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 17-ந் தேதி விருதுநகரில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார்.
இதற்காக விருதுநகருக்கு நேரில் செல்லும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் படித்த கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியில், விரிவாக்க காலை உணவு திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.