

சென்னை,
கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி அருள்மிகு ஆண்டவர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று (நவம்பர் 15) அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
வடபழனி முருகன் கோவிலில் கடந்த நவம்பர் 10-ந்தேதி மகா கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதால், சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்கியது. இது உச்சிகால பூஜையுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து சுவாமிக்கு தீர்த்தவாரி மற்றும் கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார உற்சவம் இன்று இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும், தெய்வானை சமேத சண்முகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கந்த சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக நாளை (நவம்பர் 16) இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பால்குடம் மற்றும் காவடி எடுத்து வரும் பக்தர்களுக்குத் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முதியோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக முன்னுரிமை வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும் கோவில் மற்றும் மாட வீதிகளில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாட வீதிகளில் வாகனப் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பக்தர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வடபழனி மெட்ரோ ரெயில் மற்றும் மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.