

கன்னியாகுமரி,
சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழும். இந்த நிகழ்வின்போது மாலையில் சூரியன் மேற்கு பகுதியில் உள்ள அரபிக்கடல் பகுதியில் பந்து போன்ற வடிவத்தில் கடலுக்குள் மறையும், அதே நேரம் கிழக்கில் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் வட்ட வடிவத்தில் ஒளி வெளிச்சத்தில் தெரியும்.
இந்த நிகழ்வை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, சன் செட் பாயிண்ட் மற்றும் முருகன் குன்றம் ஆகிய பகுதிகளில் கண்டு ரசிக்கலாம். ஆண்டுதோறும் இந்த அபூர்வ நிகழ்வை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள். இதனால் அன்று மாலை கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.