

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அருகே, கடையின் ஷட்டரில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இந்த பதிக்கு அருகே உள்ள ஒரு கடையின் இரும்பு ஷட்டரில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். சுமார் 10 அடி நீளமுள்ள அந்த பாம்பைப் பார்த்ததும் பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடையின் ஷட்டரில் சுருண்டு கிடந்த அந்த 10 அடி மலைப்பாம்பை எந்தவிதச் சேதமுமின்றி மிகவும் லாவகமாகப் பிடித்து மீட்டனர். பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.