கன்னியாகுமரி: ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீஸ் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் உயிர் பலிகள் நிகழ்ந்ததை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் உயிர் பலிகள் நிகழ்ந்ததை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கனிமவள சரக்கு காலி வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் மாவட்டத்துக்குள் நுழைய தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே மணக்குடி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போக்குவரத்து போலீசார் நேற்று காலை அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். நேர கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.






