

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது" வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டுச் சான்றிதழை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனாவிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற பின் பேசிய மாவட்ட கலெக்டர் அழகுமீனா, இந்த சாதனை குறித்து கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலின விகிதம் குறைவாகக் கண்டறியப்பட்ட தோவாளை, நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், தக்கலை, மேல்புறம் ஆகிய 5 வட்டாரங்களில் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 965-லிருந்து 990.6 ஆக அதிகரித்துள்ளது.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்: இந்த திட்டத்தின் கீழ் பெண் சிசுக்கொலைத் தடுப்பு மற்றும் பெண் கல்வியை உறுதி செய்யப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கர்ப்ப கால கண்காணிப்பு: அனைத்து கர்ப்பங்களும் 100 சதவீதம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்து, PICME எண் மூலம் பிரசவம் வரை தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஸ்கேன் மையங்கள் ஆய்வு: மாவட்டத்தில் உள்ள 233 ஸ்கேன் மையங்களில் PCPNDT சட்டத்தின்படி கருவின் பாலினம் கண்டறிதல் தடுக்கப்படுவதை உறுதி செய்யத் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
விழிப்புணர்வு நிகழ்வுகள்: பள்ளிகளில் போக்சோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் மரக்கன்றுகள் வழங்கி கவுரவித்தல் போன்ற புதுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டன.
சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS) ஆகிய துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டதே இந்த வெற்றிக்குக் காரணம் ஆகும். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், சமூக நலத் துறை முதன்மைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன் மற்றும் சமூக நல இயக்குநர் சங்கீதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.