காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி: தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கர்நாடக முதல்-மந்திரியின் அழைப்பை தமிழக அரசு எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி: தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் நடத்தும் சதியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“காவிரி நீர் விவகாரத்தில் நதிநீர் பங்கீடு என்ற மனநிலையில் இருந்து விலகி நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலையை நோக்கி நகர வேண்டிய தருணம் வந்து விட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதை காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து துரோகம் செய்ய விரிக்கப்படும் சதி வலையாகவே பார்க்க வேண்டியுள்ளது. கர்நாடகத்தின் இந்த சதி வலையில் தமிழகம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக் கூடாது.

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெற்ற 31 ஆம் தென்னிந்திய முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ‘‘மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடக மாநிலத்திற்கு எவ்வளவு நன்மை கிடைக்குமோ, அதே அளவு நன்மை தமிழகத்திற்கும், புதுவைக்கும் கிடைக்கும். காவிரி நீர் விவகாரத்தில் நதிநீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து விலகி நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று தெரிவித்திருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காவிரி நீர் விவகாரத்தில் ஒத்துழைப்பு என்று பேசும் உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகம் இழந்து விட்டது. 1892 ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்டிருந்த காவிரி நீர்ப்பகிர்வு உடன்பாட்டை மீறி 1910 ஆம் ஆண்டில் கண்ணம்பாடி அணையை கட்ட முயற்சி செய்தது, கண்ணம்பாடி அணை எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மொத்தம் 11 டி.எம்.சி மட்டுமே கொள்ளளவு கொண்டிருக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் அரசு அறிவுறுத்தியதையும் மீறி, முதலில் 41.50 டி.எம்.சியும், பின்னர் 49.45 டி.எம்.சியும் கொண்ட அணையாக கட்டியது.

1924 ஆம் ஆண்டு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை 1974 ஆம் ஆண்டில் புதுப்பிக்க மறுத்தது, 1967 &1977 இடையிலான காலத்தில் நிலவிய தெளிவற்ற சூழலை பயன்படுத்திக் கொண்டு காவிரி துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகளைக் கட்டியது, 1990 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை எதிர்த்தது, 1991 ஆம் ஆண்டில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையும், 2007 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பையும் எதிர்த்தது, கடந்த 35 ஆண்டுகளில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருவது என காவிரி விவகாரத்தில் கர்நாடகம் இழைத்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.

இவ்வளவு துரோகங்களை இழைத்த கர்நாடக அரசு, 1990 முதல் 2018 வரை 29 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், இப்போது நீர்ப்பகிர்வு வேண்டாம்; நீர் ஒத்துழைப்பு வேண்டும் என்று கர்நாடம் கூறுவது அப்பட்டமான சதிவலை வீசும் முயற்சி ஆகும். கடந்த அரை நூற்றாண்டுகளில் ஏராளமான சட்டப் போராட்டங்களை நடத்தி காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக நடுவர் மன்றத்திலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பெற்றுள்ள தீர்ப்புகளை குப்பையில் வீசி விட்டு, 1890 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு பின்னோக்கி செல்வோம்; எந்த உரிமையும் இல்லாமல் காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் தமிழ்நாடு கையேந்தி நிற்கும் நிலையை ஏற்படுத்துவோம் என்பது தான் இந்த அழைப்பின் பொருள் ஆகும்.

1892 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து 1910 ஆம் ஆண்டில் புதிய அணையை கட்டும் பணிகளை தொடங்காமல் இருந்திருந்தாலோ, 1974 ஆம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்து இருந்தாலோ, 1970 ஆம் ஆண்டுகளில் 4 அணைகளை கட்டாமல் இருந்திருந்தாலோ, காவிரி நீர்ப்பகிர்வு குறித்த நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றின் தீர்ப்புகளை மதித்திருந்தாலோ, கர்நாடக முதல்-மந்திரியின் இன்றைய அழைப்பை ஏற்றிருக்கலாம். ஆனால், அதற்கு எதிரான நிலையையே கர்நாடக அரசு மேற்கொண்ட நிலையில், இப்போது அந்த அழைப்பை ஏற்பது தமிழகத்திற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

கர்நாடக முதல்-மந்திரியின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கும் போதெல்லாம் தமிழ்நாடு நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது; மாறாக, கர்நாடக அரசுடன் பேச்சு நடத்திதான் தண்ணீரை பெற வேண்டியிருக்கும். அப்போது கர்நாடகம் பிச்சையாக வழங்கும் நீரை மட்டும்தான் காவிரியில் நாம் பெற முடியும். இது காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பறித்து விடும்.

எனவே, கர்நாடக முதல்-மந்திரியின் அழைப்பை தமிழக அரசு எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, காவிரி நீர்ப்பகிர்வு, மேகதாது அணை ஆகியவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை விரைவாகவும், திறமையாகவும் நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com