கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தமிழகத்திலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்த தமிழர்கள், கர்நாடக மாநிலம் சாமுராய் நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் வசித்து வருகின்றனர்.
பி.எஸ். மாசிலாமணி
Published on

சென்னை,

கால்நடை விவசாயிகள் மூன்று பேர் உயிர் பறித்த கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும், மூன்று குடும்பங்களுக்கும் கர்நாடக அரசே வாழ்வு கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு

கர்நாடக மாநிலம் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மூன்று கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும்... கர்நாடகத்தில் இரண்டாவது நாளாக அங்கு வெகு மக்கள் போராட்டமும் கர்நாடக வனத்துறைக்கு எதிராக நடந்து வருகிறது.

தமிழகத்திலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி இடம் பெயர்ந்த தமிழர்கள், கர்நாடக மாநிலம் சாமுராய் நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய ஆடு மாடுகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று தங்கி இருந்து திருப்பி ஓட்டிச்செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு நேரமாகியும் கிடைக்காத கால்நடைகளை விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவர்கள் மறுநாள் காலை தன் கால்நடைகளை தேடிச் சென்ற பொழுது... அதாவது ஆகஸ்ட் 15 அதிகாலை இவர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வக்கிர தாக்குதலில் அந்தோணிசாமி வயது 50.... லாசர் குமார் 33... ஜான்ரோஸ் பீட்டர்...48 ஆகிய மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மகிமை தாஸ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது சாட்சி தான் அம்பலத்திற்கு வந்துள்ளது. வனத்துறையின் செயல் சந்தேகத்தை விளைவிக்கிறது.

பிரேத பரிசோதனை

குற்றவாளி என கருதினால் அவரை எச்சரிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது அல்லது அரசின் வழி நெறி படி துப்பாக்கி பிரயோகம் செய்யாது உயிர் பறிக்கும் நிலையில் சுட வேண்டிய அவசியம் என்ன...? அதுவும் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் சுட வேண்டிய தேவை என்ன...? அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் ஆதாரங்களை மறைக்கும் நோக்கத்தில் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைசூர் மருத்துவ கல்லூரிக்கு ஏன் ரகசியமாக, உடனடியாக கொண்டு சென்றனர். இப்படி எல்லா வகையிலும் சந்தேகத்தை விளைவிக்கக் கூடிய இந்த படுகொலையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட இவர்கள் தன் குடும்பத்துடன் அங்கே 15 ஆண்டுகள் வாழ்ந்து வருவதால் அவர்கள் கர்நாடக வாழ்விடத்தவர் ஆவர். இக் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பு கர்நாடக அரசே. எனவே உரிய இழப்பீட்டை உடன் கொடுத்திட வேண்டும். வனத்துறையினர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். உடன் இவர்களை பணியில் இருந்து விடுவித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com