‘மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை’ - அன்புமணி ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக முதல்-மந்திரி திரித்துக் கூறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
‘மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை’ - அன்புமணி ராமதாஸ்
Published on: 

சென்னை,

மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

கர்நாடக முதல்-மந்திரி

“காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை. அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டே அனுமதி அளித்து விட்டதால், தமிழ்நாடு உள்ளிட்ட யாருடைய அனுமதியையும் கோரத் தேவையில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.

கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில், இல்லாத சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைக் கூறி தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது.

பொய்யான தகவல்கள்

காவிரியின் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை; மேகதாது விவகாரத்தை திசை திருப்பக் கூடியவை; சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை திரிக்கும் தன்மை கொண்டவை.

காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்த அனுமதியும் வழங்கவில்லை. மேகதாது அணைக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 13-ந்தேதியும், அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது கடந்த மே 21-ந்தேதியும் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி மத்திய நீர்வள ஆணையத்திற்காக காவிரி மேலாண்மை ஆணையம்தான் முடிவு எடுக்கும்; அந்த முடிவில் உடன்பாடு இல்லாதபட்சத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு தெரியும் முன்பே தங்களை அணுகத் தேவையில்லை என்பதுதான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பாகும். இது கர்நாடக முதல்-மந்திரிக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் அரசியல் லாபங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை திரித்துக் கூறுகிறார்.

உரிமை இல்லை

அதேபோல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு இயல்பான உரிமை எதுவும் இல்லை. மாறாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளை பாதிக்கும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக்கூடாது என்பதுதான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தங்களின் இந்தக் கூறுகள் செல்லும் என்று 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி அளிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும், 2018-ம் ஆண்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திற்கு அணை கட்டும் உரிமை எவ்வாறு கிடைக்கும்?

அரசியல் நோக்கம்

கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று உமாபாரதியும், கஜேந்திர ஷெகாவத்தும் மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருக்கும்போது பல முறை தெரிவித்துள்ளனர். இவற்றையெல்லாம் அறிந்திருக்கும் மேகதாது அணை சிக்கலை டி.கே.சிவக்குமார் கையில் எடுப்பதன் நோக்கம் அரசியல்தான்.

ஏற்கனவே பலமுறைநான் குற்றஞ்சாட்டியுள்ளவாறு, கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் 15 மாதங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மேகதாது அணை விவகாரத்தை அரசியலாக மாற்றுவதன் மூலம் கர்நாடகத்தில் காவிரி பாயும் 11 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதுதான் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் திட்டமாகும்.

நிதிநிலை அறிக்கை

இதற்காக அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள கர்நாடக மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய அணைக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட அனைத்து நாடகங்களையும் கர்நாடக காங்கிரஸ் அரசு அரங்கேற்றும். அதே அரசியல் கணக்குகளுக்காக இந்த நாடகங்களுக்கெல்லாம் மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவளிக்கும்.

மேகதாது அணை கட்டுவதற்கான சட்டப்பூர்வ உரிமை மட்டுமின்றி, தார்மீக உரிமை கூட கர்நாடக அரசுக்கு கிடையாது. காவிரி சிக்கலுக்குத் தீர்வு காண 1990-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 1991-ம் ஆண்டில் இடைக்காலத் தீர்ப்பையும், 2007-ம் ஆண்டில் இறுதித் தீர்ப்பையும் வழங்கியது. அதற்குப் பிந்தைய 35 ஆண்டுகளில் ஓராண்டில் கூட நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படியோ, இறுதித் தீர்ப்பின்படியோ தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கியதில்லை. காவிரி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டை சட்டப்பூர்வ பங்காளியாக கருத வேண்டிய கர்நாடக அரசு, வடிகாலாக கருதி வெள்ளநீரை மட்டுமே திறந்து விடுகிறது.

வேறு வழியில்லாமல் வெள்ள நீரை திறந்து விட்ட கர்நாடக அரசு, புதிய அணையை கட்டி கூடுதலாக 70 டி.எம்.சி நீரைத் தேக்கி வைக்கும் திறனைப் பெற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு தவறாமல் தண்ணீர் வழங்குவதாகக் கூறுவதை குழந்தைகள் கூட நம்பாது. இதை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் ஒருபோதும் நம்பக் கூடாது.

வேடிக்கை பார்க்கக் கூடாது

கர்நாடகத்தில் தேர்தல் நெருங்க, நெருங்க மேகதாது அணை தொடர்பான பொய்மூட்டைகளையும், திரிபு வாதங்களையும் கர்நாடக அரசு அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைக் கூட கர்நாடக முதல்-மந்திரி திரித்துக் கூறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இதற்காக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

X