தமிழகத்தின் நீர்வள உரிமைகளில் தலையிடும் கர்நாடக அரசு - வானதி சீனிவாசன் கண்டனம்

தமிழகத்தின் வறட்சிப் பகுதிகளுக்குப் பாசன வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தில் கர்நாடக அரசு ஏன் தலையிட வேண்டும்? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Published on: 

சென்னை,

தமிழகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தடை கோரும் அளவுக்கு கர்நாடக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் வறட்சிப் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிராக தற்காலிகத் தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் செய்திகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது நேற்றோ, இன்றோ உருவான திட்டமல்ல. 1980களிலேயே தேசிய தொலைநோக்குத் திட்டம் உருவாக்கப்பட்டு, நாட்டின் நீர்வளம் மிகுந்த பகுதிகளிலிருந்து நீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான திட்டமிடல்கள் தொடங்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாகவே காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டு, முதல் கட்டத்தின் பல கட்டுமானங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த கட்ட பணிகளுக்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி ஏற்படுத்தி, விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியிருப்பது தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரான செயலாகும்.

தமிழகத்திற்குக் கிடைக்கும் உபரி நீரைப் பயன்படுத்தி, தமிழகத்தின் வறட்சிப் பகுதிகளுக்குப் பாசன வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தில் கர்நாடக அரசு ஏன் தலையிட வேண்டும்? தமிழகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தடை கோரும் அளவுக்கு கர்நாடக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தொடர்ச்சியாக தமிழகத்தின் நீர்வள உரிமைகளிலும், மேகதாது, காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி செயல்படுகிறது கர்நாடக அரசு. ஆனால், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தவெக அரசோ காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்டுவிப்பதற்கெல்லாம் தலையாட்டி பொம்மைபோல் செயல்பட்டு உரிமைகளை விட்டுக் கொடுக்கும் நோக்கில் அதன் செயல்பாடுகள் அமைந்து வருகிறது.

ஒவ்வொரு சொட்டு நீரும் ஒவ்வொரு தமிழக விவசாயியின் உரிமை..! அதை இழக்க நேரிடும் வகையில் மௌனம் காப்பது முதல்வர் ஜோசப் விஜய்க்கு அழகல்ல..

எனவே, தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக வலுவான சட்ட ஆதாரங்களுடன் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். மேலும் காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையை நிராகரிக்கச் செய்யத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தாமதமின்றி பணிகளை விரைவுப்படுத்தி, மத்திய அரசின் ஒப்புதல்கள் மற்றும் நிதியுதவியைப்பெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X