காவிரியில் ஜூன் மாதம் 9.91 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
காவிரியில் ஜூன் மாதம் 9.91 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு
Published on

சென்னை,

காவிரி நதி நீரை சுமுகமான முறையில் பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வை கண்டு வருகிறது.

இந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இதுவரை 50 முறை நடந்துள்ளது. 51-வது கூட்டம் வருகிற 28-ந்தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த கூட்டத்தை அதற்கு முன்னதாக நடத்த முடிவு செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்துவதாக மேலாண்மை ஆணையம் அறிவித்திருந்தது.

இதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இன்று (26.05.2026) புதுடெல்லியில் எஸ்.கே.ஹய்தார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், முனைவர். சத்யபிரத சாகு இ.ஆ.ப. தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், நீர்வளத்துறை அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

தமிழ்நாடு உறுப்பினர். தற்பொழுது (25.05.2026) மேட்டுர் அணையின் நீர் இருப்பு 40.742 டிஎம்சி ஆக உள்ளது எனவும். அணையிலிருந்து வினாடிக்கு 1003 கனஅடி நீர் குடிநீர், தொழிற்சாலை பண்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

நடப்பு நீர்பாசன ஆண்டில் (2025-2026) 2025, ஜூன் 1 முதல் 2026 மே 24 ஆம் தேதி வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 176.885 டி.எம்.சிக்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப்பெற்ற நீரின் அளவு 329:166 டி.எம்.சி. ஆகும். இதனை சுட்டிகாட்டி கர்நாடக உறுப்பினர், கர்நாடகம் அளித்துள்ள மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கர்நாடக அதன் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தமிழக உறுப்பினர் வலியுறுத்தினார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டு மே 26 அன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்ற கருத்தின்படியும், கர்நாடக அணைகளின் நீர் வரத்தினை கருத்தில் கொண்டும் தமிழகத்திற்கு 2026 ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி நீரினை சுப்ரீம்கோர்ட்டின் ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com