கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் பாஜக என்றுமே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே என்று கேள்வி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலளித்து, "கர்நாடகாவில் காங்கிரஸ் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் தம்பி மாணிக்கம் தாகூர். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான், கடந்த 2018-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? மத்திய பாஜக அரசு அமைத்த ஆணையம் தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டாலும் கூட, அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உங்கள் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது என்பது ஊரறிந்த விஷயம். இதில் மத்திய பாஜக அரசின் மீது நீங்கள் பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல்.

எனவே, CWMA கூறிய பிறகும் கூட தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் இழுத்தடித்த உங்கள் கர்நாடக காங்கிரஸை முடிந்தால் கேள்வி கேளுங்கள். தமிழக முதல்வரை சந்திக்க வருமாறு கூறிவிட்டு, பின்பு சாக்குபோக்கு சொல்லி கதவை சாற்றி, அவமானப்படுத்தியது ஏன் என உங்கள் கட்சியின் கர்நாடக முதல்வருக்கு முடிந்தால் கண்டனம் தெரிவியுங்கள்.

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் உங்கள் சொந்த அரசிடம், அத்திட்டத்தை கைவிடுமாறு முடிந்தால் எடுத்துக் கூறுங்கள். அதை விட்டுவிட்டு வீண் விவாதம் வேண்டாம்.

தமிழகத்திற்கு வந்த உங்கள் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தற்போது தமிழகத்தில் பற்றி எரியும் காவிரி நீர் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்றதில் இருந்தே தெரிகிறது, காங்கிரஸ்காரர்களுக்கு தமிழகத்தின் மீதுள்ள அக்கறை.

கர்நாடகாவில் காங்கிரஸ் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காவிரி நீர் பிரச்சினை மட்டுமா, கச்சத்தீவை தாரை வார்த்து மீனவர்களுக்கும் துரோகம் இழைத்த கட்சி தானே காங்கிரஸ். எனவே, தமிழக நலனைப் பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதில் பாஜக என்றுமே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com