

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை, மலை உச்சி யில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்தி கள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம் பாளுடன் சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்திலும் மேள தாளங்கள் முழங்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மகா தீபத்திற்கு பயன் படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணி அளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி அரு கில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட் டது. அதனைத் தொடர்ந்து மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படு கிறது. இதில் 50 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபத்தையொட்டி கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பக்தர் களை கவரும் வகையில் வண்ண மலர்களால் நடராஜர், சிவலிங்கம் போன்றவை செய்யப்பட்டது. மேலும் மாணிக்க வாசகர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் படத்துடன் கூடிய மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.