கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karunanidhi #RIP
கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழி நெடுக தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்த படி கருணாநிதியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. ஆம்புலன்சின் இருபுறமும் நிற்கும் ஏராளமான திமுக தொண்டர்கள், தங்கள் தலைவர் உடலை கண்டு கண்ணீர் விட்ட படியே ஆம்புலன்சை பின் தொடர்ந்தனர்.

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன், அரசியல், சமூகம், இலக்கிய துறைகளில் சாதனை செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது தர வேண்டும் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த தலைவர் கருணாநிதி, அவரது உடலை அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் பூத உடலுக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com