கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
Published on

சென்னை,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மனை ஏற்று விஜய் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார். இந்த நிலையில், இன்று தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட த.வெ.க தலைவர் விஜய் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் விஜய் டெல்லி புறப்பட்டார். தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், உதவியாளர் ஜெகதீஷ் உள்பட 7 பேர் தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் உடன் செல்கின்றனர்.

நாளைய விசாரணையில் விஜய்யிடம் சிபிஐ பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இதே வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 17-ஆம் தேதி செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com